November 21, 2011

கணினித் தமிழ் பயன்பாட்டில் புலிகளே முன்னோடிகள்!



கணினி ஆங்கிலத்திற்கு கணினித் தமிழ் ஈடுகொடுக்க முடியாமற் போனதற்கு உலகத் தமிழர்களின் அக்கறை இன்மையே முழுமுதற் காரணம். மொழி அடையாளத்தைப் பேணுவதில் காட்டாத ஆர்வத்தை ஆங்கிலத்திற்கு காட்டுகின்றனர் என்பது சமூகவியலாளர்களின் முடிவு. மலேசிய நண்பன் பத்திரிகையில் ஞாயிறு தோறும் தொடர் கட்டுரை எழுதும் எமது மனம் கவர்ந்த கருத்தாளர் ஆ.திருவேங்கடம் என்பார் 2011 ஒக்ரோபர் 16ம் நாள் இதழில் “தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் முன்னோடிகள்” என்று தலைப்பிட்டுள்ளார்.

ஒப்பிட்டேன் ஓலமிட்டேன் என்ற இரு சொற்களை மகுடமாகக் கொண்ட கட்டுரைத் தொடர் விழிப்பூட்டலைத் தனது மையக் கருவாகக் கொண்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய குறிப்பு திருவேங்கடம் அவர்களின் 80ம் இலக்கக் கட்டுரையில் காணப்படுகிறது. அவருடைய எழுத்தை அப்படியே தருகிறோம்.’

முழுக்க முழுக்க இணையதளம் வழியே தங்களுக்கிடையேயும் உலகத் தமிழரோடும் தொடர்புகளை வைத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழ்ப் பங்களிப்பு அளப்பரியது. இன்றும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் கணினித் தமிழ்ப் பயன்பாடும் பங்களிப்பும் போற்றத் தக்கவை, மதிக்கத்தக்கவை. கணினித் தமிழ்ப் பயன்பாட்டில் அவர்களே உலகத் தமிழர்களுக்கு முன்னோடிகள்”

தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் தமிழைப் பற்றி இவ்வாறு சொன்னார். – எமது மொழியும் கலையும் பண்பாடும் எமது நீண்ட வரலாற்றின் விழுதுகாளக எமது மண்ணில் ஆழமாக வேரூன்றி நிற்பவை. எமது தேசிய வாழ்வில் ஆதாரமாக நிற்பவை.

தூய தமிழ்ப் பேணுகையும் பயன்பாடும் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட இலட்சியங்களில் முதன்மையானவை. மொழியையும் மண்ணையும் இழந்த சமூகம் மறைவதும் மடிவதும் நிட்சயம். பிற மொழிக் கலப்பு மொழியை மாசுபடுத்துவதோடு நாளடைவில் அதற்கு முடிவு கட்டிவிடும் என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் கருத்து.

ஸ தொடக்கம் ஹ வரையான ஐந்து கிரந்த எழுத்துக்களை புலிகள் தவிர்த்தனர்.  இவை செத்துப்போன வடமொழி எழுத்துக்களின் எச்சங்கள். இந்த எழுத்துக்களின் தேவை வடமொழிப் பெயர்களைப் பிள்ளைகளுக்குச் சூட்டுவதால் எழுந்தது. பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டுவதற்கு ஏதுவாக தமிழ்ப் பெயர் அடங்கிய நூலை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டனர்.

தமிழ்ப் பெயர் சூட்டும் பெற்றோருக்கு மானியத் தொகை வழங்கியதோடு குழந்தையின் பெயரில் தமிழீழ வங்கிச் சேமிப்பு கணக்கைத் திறந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் ஆங்கிலக் கல்வியை ஊக்குவித்தனர். ஆனால் ஆங்கிலம் தமிழில் கலந்து தமிங்கிலம் உருவாவதைத் தீவிரமாகத் தடுத்தனர்.
குழந்தைகளுக்கு வட மொழிப்பெயர் சூட்டுவதைத் தடுப்பதில் தமிழீழ விடுதலைப் புலிகள் காட்டிய முனைப்பு மிக முக்கியமான காரணத்தை உள்ளடக்கியது. பெயர் மொழியின் குறிகாட்டி. பெயரைக் கொண்டு இனத்தை அடையாளம் காண முடியும்.  மொழிச் சிதைவின் தொடக்கம் தவறான பெயருடன் ஆரம்பிக்கிறது.

இரு மொழிகளான ஆங்கிலத்தையும் தமிழையும் கலந்து பெயரை எழுதும் இனம் தமிழர் மாத்திரமே. எம.ஜீ.ராமச்சந்திரன் எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்றவை உதாரணங்கள. இதையும் தமிழீழ விடுதலைப் புலிகள் தவிர்த்தனர்.

குறிக்கோளற்ற வெறுமையான கலை வடிவங்களால் பிறவற்றின் ஆக்கிரமிப்பைத் தடுக்க இயலாது. போராட்டத்தோடு இணைந்த கலை வடிவம் தாக்குப்பிடிக்கும். அதனால் விருத்தி அடையவும் முடியும். விடுதலைப் போராட்டத்திற்கு கலை உதவும். கலை வளர்ச்சிக்கு விடுதலைப் பேராட்டம் உதவும். இவை தமிழீழ விடுதலைப் புலிகள் வளர்த்த மூலக் கருத்துக்கள்.

நன்றி: ஈழம் பிரஸ்/ க.வீமன்

0 கருத்துக்கள்:

Post a Comment

 
Related Posts Plugin for WordPress, Blogger...